தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருப்பு அதிகரிப்பதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றால அருவியில் குளிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக தற்போது வரை தடை அமலில் உள்ளது.
இந்நிலையில் குற்றால அருவிகளில் வரும் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் குற்றாலத்தில் குளிக்க அனுமதி என்ற தகவல் உண்மையில்லை என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.