தாலுகா அலுவலகத்திற்கு முன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமாட்சி கொட்டாய் என்னும் கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற திருப்பதி, திடீரென தான் வைத்திருந்த கேனல் உள்ள பெட்ரோலை, தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து திருப்பதியிடமிருந்து கேனை பிடுங்கி விட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று திருப்பதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் சில நபர்கள் தடுப்பதாகவும், அதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், திருப்பதி கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த திருப்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தாலுகா அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் திருப்பதியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.