பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “1991ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆர்கே நகர் தவிர, மற்ற இடைதேர்தலில் ஆளும் கட்சி தான் வென்றுள்ளது. இது பெரிய இமாலய வெற்றி என சொல்வதற்கு ஒன்றும் இல்லை.இடைத்தேர்தலில் வாக்களிப்பதால் ஆட்சி மாற்றம் வரபோவது இல்லை என மக்கள் தற்போது அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர். இது எந்த தேர்தலுக்கான முன்னோட்டமும் கிடையாது. எதிர்பார்த்த ஒன்று தான். மேலும் எங்களது கட்சியின் பதிவு செய்வது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்டது. விரைவில் பதிவு செய்து சின்னம் கிடைத்து விடும்” என்றார்.
முதலமைச்சரை புகழேந்தி சந்தித்தது குறித்த கேள்விக்கு, கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும். விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம் என பேசிய தினகரன், புகழேந்தியின் பேச்சும் நடவடிக்கையும் 24ஆம் புலிகேசியை நியாபகப்படுத்துவதாக கேலி செய்தார்.சசிகலா சட்டப்படி சிறையில் இருந்து வெளி வர எல்லா தகுதிகளும் உள்ளது. அனைத்து கைதிகளுக்கும் நடைமுறை ஒன்று தான். பெங்களூரு சிறை விதிப்படி தான் சசிகலா உடை அணிந்துள்ளார். மேலும் வினய் குமார் அறிக்கையில், சசிகலா பெயர் எங்கும் குறிப்பிடவில்லை. சசிகலா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. தீபாவளிக்கு சசிகலா வெளியில் வருவார் என யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
மேலும், பொதுமக்களை பாதிக்காதவாறு மருத்துவர்களை அழைத்து பேசி பிரச்னைகளை அரசு தீர்க்க வேண்டும் என்ற தினகரன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான் என்றார்.