இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் திருப்பணிகளுக்கு பயன்படாத தங்கங்களை வங்கியில் வைத்து அதில் கிடைக்கும் நிதி வட்டி தொகையை வைத்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோத செயலாகும் .
மேலும் மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு செலுத்திய காணிக்கையை பிற கோவில்களுக்கு பயன்படுத்துவது அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலாகும். மேலும் உச்சநீதி மன்றமானது ஒரு கோவிலிலுள்ள செல்வத்திற்கு உரிமையாளர் அந்தந்த கோவிலின் கடவுள் தான் என தீர்ப்பளித்திருந்தது. மேலும் இந்து அறநிலையத்துறை தான் கோவிலின் உரிமையாளர் என்பது போல் செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் திமுக அரசானது பக்தர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோத குற்ற செயலை செய்கிறது. பிற கோவிலின் நலனிற்காக ஒரு கோவிலின் வளத்தை உபயோகிக்க கூடாது. இதற்கு இந்து அறநிலையத் துறைக்கும், அரசாங்கத்திற்கும் எந்தவித உரிமையும் அதிகாரமும் இல்லை. மேலும் இத்தகைய சட்டவிரோத செயல் செய்வதை தமிழக அரசானது உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.