Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும்’ – நடிகர் விவேக் கண்ணீர்..!!

அஜாக்கிரதை, அலட்சியம் இவை – இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன என்று குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது பற்றி நடிகர் விவேக் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 17 மணிநேரத்திற்கும் மேலாக இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித், 70 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால் மீட்புப்பணிகள் தீவிரமைடைந்துள்ளன. குழந்தையை உயிருடன் மீட்க தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக சமூக வலைதளங்களில் #SaveSujith என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் பிராரத்தனை செய்வதோடு, குழந்தையை விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள் பலரும் இந்த அவலநிலையைப் பற்றி ஆதங்கம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என பதிவிட்டிருக்கிறார். அதில், ‘சுஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை அலட்சியம் இவை இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு’ என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |