தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது. மேலும் சேலத்திலிருந்து பள்ளிப் பாளையத்திற்குச் செல்லும் அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.