தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தரப்புக்கு வெற்றி கிட்டியது. திமுகவின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. விக்கிரவாண்டியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 விழுக்காடு உள்ளனர். பட்டியலினத்தவர்கள் 25 விழுக்காடும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினரும் மற்ற சமுகத்தினர் சொற்ப அளவிலும் உள்ளனர்.
இத்தொகுதியில் இரு கட்சிகளும் (திமுக, அதிமுக) வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருந்தது. கடந்த முறை (2016) விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் ஆறாயிரத்து 912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 56 ஆயிரத்து 845 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாமக வேட்பாளர் 41ஆயிரத்து 428 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒன்பதாயிரத்து 981 வாக்குகள் பெற்றிருந்தார். நோட்டாவுக்கு ஆயிர்தது 385 வாக்குகள் கிடைத்தது.
ஆக கடந்த முறை திமுக வசமிருந்த வெற்றி, இம்முறை அதிமுக வசம் சென்றுள்ளது. அதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததே காரணம். ஏனெனில் அதிமுகவுடன் பாமக இணையும்போது வாக்கு வங்கி உயர்வை கண்டுள்ளது. அதாவது கடந்த முறை 35.97 விழுக்காடு வாக்குகள் பெற்று திமுக வெற்றிபெற்றது. இரண்டாவது, மூன்றாவதாக வந்த அதிமுக, பாமக. முறையே 32.07, 23.37 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது திமுக, அதிமுக வாக்கு வங்கி இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாக 4.88 விழுக்காடாகவே உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக, பாமக கூட்டணியை எதிர்த்து களம்கண்ட திமுக 47.26 விழுக்காடு பெற்று அபார வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணிக்கு 42.38 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருந்தது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வன்னியர் சமூக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் உள்இடஒதுக்கீடு, வன்னியர் சங்கத் தலைவர் ஏ.ஜி. கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் ஆகியவை முக்கியமானதாகும். ஒருவேளை 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் இத்திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளிப்பார் என்பதில் ஐயமில்லை.