ஊழியரிடம் செல்போன் திருடிய வாலிபரை ரயில்வே காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலங்காடு பகுதியில் அபிஷேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் பயணிகள் உட்காரும் இருக்கையில் தனது விலை உயர்ந்த செல்போனை வைத்துவிட்டு அபிஷேக் குமார் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் அவரின் விலை உயர்ந்த செல்போனை எடுத்துக் கொண்டு அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் ஏறி உள்ளார். இதனை பார்த்து அபிஷேக் குமார் உடனே அரக்கோணம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலை அறிந்த ரயில்வே காவல்துறையினர் ரயில் அரக்கோணம் வந்தடைந்ததும் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் உஸ்மான் என்பது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.