உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஊழல் ஆட்சிக்கு எதிராக சமூக பணியாற்ற வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு அருகாமையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட ஒன்றிய, ஊராட்சி, மன்ற தலைவர் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து பேசியுள்ளார்.
அப்போது நாம் தமிழர் கட்சி சார்பாக அன்பு தங்கை மற்றும் தம்பி சொந்தங்கள் தனித்து போட்டி இடுகின்றனர். இதில் அதிகார பலம் மற்றும் பண பலம் போன்றவர்களை கடந்து நாம் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என அவர் கூறியுள்ளார். பின்னர் தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற ஊழல் ஆட்சிக்கு எதிராக நல்லாட்சி அமைக்க நாம்தமிழர் சொந்தங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு வீடாக சென்று மக்களிடத்தில் வாக்கு சேகரித்து வெற்றி பெற்று பின் நல்ல ஒரு சமூகப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், 100 நாள் திட்ட பணிகளை தமிழக அரசு முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.