சிங்கப்பூரில் சாலை விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த இளைஞருக்கு அவருடைய ஆப்பிள் வாட்ச் தக்க சமயத்தில் உதவிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூரை சேர்ந்த முகம்மது பிட்ரி (24) எனும் இளைஞர் வெறிச்சோடிய சாலை ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மயக்கமானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ஐ அவருடைய கையில் அணிந்துள்ளார். இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 வகை வாட்ச் ஈசிஜி டிராக்கர், விபத்து கண்டறிதல், அவசர அழைப்பு உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இந்த வசதிகள் மூலம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 வகை அதனை பயன்படுத்துவோருக்கு விபத்து ஏற்படும் போது எச்சரிக்கையினை தெரிவிக்கும்.
இதையடுத்து வாட்ச்-ஐ பயன்படுத்துவோரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றால் அவசர அழைப்புக்கு உடனடியாக செய்தியினை அனுப்பி வைக்கும். அந்த வகையில் விபத்துக்குள்ளான முகம்மது பிட்ரியின் வாட்ச் எச்சரிக்கை எழுப்பியபோது அவரால் பதிலளிக்க இயலாத காரணத்தினால் அவசர சேவை மற்றும் அவசர கால தொடர்புகளுக்கு குறுஞ்செய்தி ஒன்றினை அவர் விபத்துக்குள்ளான இடத்துடன் சேர்த்து அனுப்பியுள்ளது. அதன் பிறகு அந்த இளைஞர் மருத்துவமனையில் சரியான நேரத்தில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.