புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் திடீரென ஆற்றில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சி பகுதியையும் மற்றும் வாணியம்பாடி நகரையும் இணைக்கும் பாலமாக பாலாற்று மேம்பாலம் அமைந்திருக்கிறது. இந்தப் பாலத்தின் வழியில் 50-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தின் மீது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
இதில் ஒரு பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மறு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அடுத்து பாலத்தின் இருபுறமும் இரண்டு அடி உயரத்துக்கும் குறைவான தடுப்பு சுவர்கள் இருந்தாலும் விபத்துக்கள் நடக்கவில்லை என்பதினால் பாலத்தின் பக்கவாட்டில் சுவர்களின் பாதுகாப்பு கருதி 5 அடி உயரத்திற்கு கட்டியுள்ளனர்.
பின்னர் சரியான அடித்தளம் இல்லாத காரணத்தினால் பாலத்தின் கிழக்குப் பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு இரும்புக்கம்பி சென்ட்ரிங் வேலை முடிந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென அடி தளத்துடன் சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பணிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் முன்வர வேண்டுமென பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.