மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி தேர் வீதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் இரவு வேளையில் உறங்கி கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் வீட்டு சமையல் அறையில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் தாய்- மகன் இருவரும் உறக்கத்தில் இருந்து எழுந்தனர். இதனையடுத்து ராஜேஷ் சமையலறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது சமையலறையில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் உடனடியாக வெளியே ஓடிவந்தார். இந்நிலையில் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிறியது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் வீட்டில் மற்றொரு அறையில் இருந்த ராஜலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டார். இதனைதொடர்ந்து ராஜேஷ் சுதாரித்துக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டரை வெளியில் கொண்டு வந்துவிட்டார்.
இந்த விபத்தினால் ராஜேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இவ்வாறு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் வீடு இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது தீயணைப்பு துறை வீரர்கள் கூறியதாவது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கியாஸ் சிலிண்டர் வெடித்து இருக்கும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.