விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது சீமான் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விசிகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் நம் கட்சியானது தொடர்ந்து போராடி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். தமிழகத்தை ஆள்பவர்கள் தான் மாறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ஆட்சியில் எந்த வித மாற்றமும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஸ்டாலின் தனது வாக்குறுதியில் 202 நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அவர் இதில் பத்தை கூட நிறைவேற்றவில்லை. மேலும் மத்திய அரசானது மாநில அரசுகளின் தீர்மானங்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
இந்த வேளையில் வேட்புமனுவை வாபஸ் வாங்குமாறு திமுகவினர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கடத்திச் சென்று மிரட்டி பணயம் வைக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும், ஆட்சியரிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மிகப்பழமையான திமுக கட்சியானது எங்களை பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள்” என்று கூறினார்.