கைக்குழந்தையுடன் சென்று பேருந்தில் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தடுத்தாலங்கோட்டை பகுதியில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான சுதா என்பவருடன் பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு செல்வதற்கு பார்த்திபனூரில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து போதும்பொண்ணு அருகே ஒரு பெண் கைக்குழந்தையை வைத்துகொண்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் போதும்பொண்ணு மற்றும் சுதா இருவரும் பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது போதும்பொண்ணு அவருடைய பையில் வைத்திருந்த மணி பர்ஸ் காணமல் போயிருந்துள்ளது. மேலும் அந்த பர்சை பேருந்தில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த அந்த பெண் தான் எடுத்திருப்பார் என சந்தேகமடைந்த அவர்கள் உடனடியக பரமக்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று அந்த பெண்ணை தேடியுள்ளனர்.
இதனைதொடர்ந்து பேருந்து நிலையத்தில் கைகுழந்தையை வைத்திருந்த அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் போதும்பொண்ணின் மணி பர்சை திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போதும்பொண்ணு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் சாந்தி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.