கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்து கடன் பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் யாரெல்லாம் என்பதை அறியும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதை கண்டறியும் பணியானது நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் அனைத்து நகைகளையும் ஆய்வு செய்து தினந்தோறும் 5 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைப்பற்றி கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் மற்றும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி வேளாண்மை இயக்குனர்களும் தங்கள் மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அனைத்து நகைகளின் விவரத்தை ஆய்வு செய்ய தேவையான புள்ளிகளின் எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு 250 முதல் 300 கிராம் என்ற வீதம் மொத்த நகைகளையும் ஆய்வு செய்ய தேவைப்படும் நாட்கள் மற்றும் 100% நகை கடன் ஆய்வு முடிவு பெறும் நாட்கள் போன்ற அனைத்து விபரங்களையும் நாள்தோறும் மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளனர். ஒரே நபர் பல வங்கிகளில் கடன் பெற்றுறிருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் பணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தவணையை கட்டாமல் இருந்தால் அதற்குரிய சட்ட பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூலிக்கலாம் என்று அரசு சார்பாக தெரிவித்துள்ளது.