பிரான்சில் இரண்டு மகள்கள் தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் உள்ள Le Mans (Sarthe) என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு ஒரு வாரமாக செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பள்ளிக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் சிறுமியின் குடும்பத்தினரிடமிருந்து எந்த தகவலும் வராத காரணத்தினால் காவல்துறையினருக்கு இதுகுறித்து சந்தேகத்தின் பெயரில் பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
அதன் பிறகு காவல் துறையினர் அந்த சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுமியின் தாய் அவருடைய வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த சிறுமியையும், அவருடைய தங்கையையும் மீட்டு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு அந்த இரண்டு சிறுமிகள் தங்களது தாய் உறக்க நிலையில் இருப்பதாக நினைத்து அவருடைய சடலத்துடன் வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுமியின் தாயாருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.