கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கா பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நெலமங்கா பகுதியில் வசித்து வந்த அந்தக் குடும்பத் தலைவர் பிரசன்னகுமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் அந்த துக்கத்தில் இருந்து வெளியில் வர முடியாத அவருடைய மனைவி தன் குழந்தைகளுடன் தற்போது தற்கொலை செய்து கொண்டார். தாய் வசந்தா, மகள் நிக்சிதா ஓர் அறையிலும், மகன் மற்றொரு அறையிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதைப் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணையின்போது, கடந்த வருடம் அவருடைய கணவர் இறந்து போனதால் மனமுடைந்து காணப்பட்ட இந்த குடும்பத்தினர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது. அந்தக் கடிதத்தில் நாங்கள் வீட்டுக்காக வாங்கிய கடன் ஓரளவு அடைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன் தொகையை இந்த வீட்டை விற்பனை செய்து எடுத்துக்கொண்டு மீதி உள்ள பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு வழங்குமாறு எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.