கிராமசபை கூட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கிராமசபை கூட்டம் தொடங்கியவுடன் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கேட்டபோது “ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் மற்றும் பணி வழங்காததால் அதற்கான கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக” அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புத்திரகவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று சின்னசோரகை ஊராட்சி மன்றத்தின் சார்பாக விநாயகர் கோவிலின் அருகே கிராமசபை கூட்டமானது நடந்தது. அந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த மன்னாதன் என்பவர் சாலை வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த ஒன்றியக்குழு தலைவர் பானுமதி பாலசுப்பரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவ பிரபு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மன்னாதனிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் சாலை வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த பின் மன்னாதன் சமாதானம் அடைந்தார்.
மேலும் ஆணையம் பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரான செல்வம் கலந்துகொண்டு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிவடைந்தது. இதனைதொடர்ந்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரி மற்றும் 6 உறுப்பினர்கள் காலை 11 மணியளவில் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது அலுவலகம் அடைத்து இருந்ததால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.