வங்கதேச டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஷாகிப் அல் ஹாசன். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஷாகிப், சமீபத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 11 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சில வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்றபின் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தச் சூழலில் அக்டோபர் 22ஆம் தேதி கிராமின்போன் செல்ஃபோன் சேவை நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் ஷாகிப்-அல்-ஹாசன் செயல்பட்டுள்ளார். இது அந்நாட்டு கிரிக்கெட் வாரிய விதிமுறைகளுக்குப் புறம்பான ஒன்றாகும். வங்கதேச கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் செல்ஃபோன் சேவை நிறுவனங்களின் விளம்பரத் தூதராக செயல்படக் கூடாது என்ற விதி உள்ளது. இதை ஷாகிப் மீறியுள்ளதால் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசன், செல்போன் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்பட்டதற்கு ஷாகிப் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதில் அவருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அவரது விளக்கம் முறையாக இல்லாவிட்டால் ஷாகிப் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதனிடையே வங்கதேச அணியின் இந்திய சுற்றுப்பயணம் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்தச் சூழலில் ஷாகிப் இப்படியொரு சிக்கலில் சிக்கியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.