சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 3\4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடையின் மேற்குப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அம்பை குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் சிங்கம்பட்டி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன் மற்றும் குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் சாலையோரம் 35 பெரிய மூட்டைகள் மற்றும் 2 சிறிய மூட்டைகள் என மொத்தம் 1772 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.