பிரிட்டனில் 15 வயதுடைய சிறுமி கொரோனோ தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஜோர்ஜா ஹாலிடே. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரே வாரத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கொரோனா தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயாரான டிரேசி ஹாலிடே தெரிவித்துள்ளதாவது, என் மகள் அதிக சுறுசுறுப்புடன் இருப்பாள்.
அவள் நண்பர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் அதிக நேரம் செலவிட விரும்புவாள். பிறருக்கு உதவி செய்வது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. திடீரென்று அவளுக்கு காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டது. அதன் பின்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
எனினும், சாப்பாடு உண்ண முடியாத அளவிற்கு உடல்நிலை மோசமடைந்தது. எனவே தான் மருத்துவமனையில் அனுமதித்தோம். நான் மகள் கூடவே தான் இருந்தேன். சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது, சீரான இதயத் துடிப்பு இல்லை. மருத்துவர்கள், தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொண்டனர். எனினும் என் மகளை காப்பாற்ற முடியாமல் போனது என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.