விவசாயிகள் எதிர்ப்பை மீறி லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு ராட்சத குழாய்கள் வந்தடைந்துள்ளது.
தமிழக-கேரள எல்லையான தேனியில் உள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது 142 அடியாக உள்ள முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை அளித்ததன் அடிப்படையில் சுப்ரீம் நீதிமன்றம் அதற்க்கான அனுமதியை அளித்துள்ளது.
ஆனால் கேரள வனத்துறையினர் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் எடுத்து செல்லும் திட்டத்தை அரசு அறிவித்து அதற்காக 1,295 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று அந்த எதிர்ப்பையும் மீறி லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் தேனி மாவட்டம் குன்னூருக்கு வந்தடைந்துள்ளது.
மேலும் விரைவில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.