தம்பதியினரிடமிருந்து மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொளத்துப்பாளையம் ஓடக்காட்டு தோட்டத்தில் பழனிசாமி என்பவர் தனது மனைவி சொர்ணாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தம்பதிகளாக செம்மாண்டம் பாளையத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்று விட்டு வீடு திரும்பும் வழியில், அழகுமலை கோவில் அருகே வந்துகொண்டிருந்தபோது, 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு மர்ம நபர்கள் சொர்ணாத்தாள் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனால் நிலை தடுமாறி பழனிசாமியும் சொர்ணாத்தாளும் கீழே விழுந்து விட்டனர். அதன்பிறகு மர்மநபர்கள் 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பழனிசாமி அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.