தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வரும் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காமராஜர் நினைவு நாளான நேற்று அவரின் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், காமராஜர் ஆட்சி தமிழகத்தில் வருமா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர், எனக்கு தெரிந்து வரும், காரணம் என்னவென்றால் இப்போது இருக்கக்கூடிய இளைஞர்களுடைய எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இளைஞர்கள் இந்த மாயை அரசியலில் வீழ்வதற்கு தயாராக இல்லை. நல்ல அரசியல்வாதிகள் வேண்டும், நேர்மையானவர்கள் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதற்கு களம் தயாராகிவிட்டது, அரசியல்வாதிகள் தயாராகவில்லை என்பதுதான் எங்களுடைய தனிப்பட்ட கருத்து. பத்திரிகை நண்பர்களும் கூட காமராஜர் ஆட்சி மறுபடியும் தமிழகத்தில் வரவேண்டும் என்றால் உங்களுடைய பங்களிப்பு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது. இப்போது பத்திரிக்கையில் பார்த்தோமென்றால்…. அண்ணாமலை யாரை திட்டினர் ? யாரு அண்ணாமலையை திட்டினார் ? இதுதான் செய்தி.
இதையெல்லாம் தாண்டி அடுத்தபடி செல்ல வேண்டுமென்றால் ஆரோக்கியமான அரசியலை வைத்து விவாதம் செய்யும் பொழுது நல்ல நண்பர்கள், அற்புதமான அரசியல்வாதிகள் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வருவார்கள். அதனால் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் தயாராகிவிட்டார்கள் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்கு….அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த மாமனிதருடைய புனித ஆட்சியை கொண்டு வருவதற்கு பாடுபடவேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.