தங்களுக்கு இடம் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளமேடு என்னும் பகுதியில் மலைவாழ் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தெப்பக்குளமேடு பகுதியில் இடம் வழங்குவதோடு குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மலைவாழ் மக்களுக்கு தெப்பக்குளமேட்டில் வீடுகள் கட்டிக் கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், வனத்துறையினர் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களது வார்த்தையில் மக்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் அவர்கள் மாவட்ட கலெக்டர் நேரில் வர வேண்டுமென்றும், அதுவரை தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைவாழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.