Categories
தேசிய செய்திகள்

காரை ஏற்றினாரா அமைச்சரின் மகன்?… உ.பியில் வன்முறை… விவசாயிகள் உட்பட 8 பேர் பலி..!!

உ.பி லக்கீம்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையில் விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.. அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்..

இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்..  அப்போது முதல்வரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்றுள்ளார்.. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் சென்றபோது, அவரையும் விவசாயிகள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் மத்திய அமைச்சர் மகன் கூட்டத்தில் புகுந்து இடித்து தள்ளி காரை எடுத்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கார் மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக பாரதிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.. மேலும் கார் மோதியதில் 8 விவசாயிகள் படுகாயமடைந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகனின் கார் உட்பட 3 காரை அடித்து உடைத்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் திக்குனியா கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டு கலவரமாக மாறியது.. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது.. இந்த நிலையில் லக்கீம்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையில் விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தினர் கூறியதாவது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவும், அவரது மகனை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய இணை அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.. மேலும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி ஒருவர் இறந்ததாகவும் புகார் கூறுகின்றனர்..

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கல்வீச்சில் பாஜகவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |