கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் ஆசிரியர் ஒருவர் கூலி வேலை செய்வதாக கூறி கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள குணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென கலெக்டர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவரது காலில் விழுந்து கதறி அழ தொடங்கியுள்ளார். அப்போது தனது பெயர் கொடியரசி, நான் எம்.எஸ்.சி, பி.எட் படித்து முடித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன்.
ஆனால் கொரோனா காலம் என்பதினால் தற்போது வேலை இல்லாமல் கூலி வேலை செய்து வருகிறேன். பிறகு எனக்கும் கணவருக்கும் சரியான வேலை இல்லாததால் குழந்தைகளுடன் பசியில் வாடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் இதுவரை எந்த விதமான அழைப்பும் வராத காரணத்தினால் ஏதேனும் ஒரு வேலை வழங்குமாறு கலெக்டரிடம் கதறி அழுது கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக கலெக்டர் அந்தப் பெண்ணிடம் மனு எழுதிக் கொடுங்கள் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.