இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சுகாதார அட்டையை சட்டபூர்வமாக அமலுக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்று கொண்டதனை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பொது இடங்களுக்குள் நுழையும்போது சுகாதார அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சுகாதார அமைச்சகம் அந்த முடிவில் காலதாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் பெற்றுக் கொண்டதற்கான சுகாதார அட்டையை மக்கள் பொது இடங்களில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென்று அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியானது.
இருப்பினும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் இந்த சட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்த இயலாது என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் இந்த சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்கு முன்பே தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.