ரிக் வாகனத்தின் மூலம் குழந்தையை காப்பதற்கான முயற்சியை அதிகாலை நான்கு மணியில் இருந்து தான் தொடங்க முடியும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30 மணி நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று மீட்டர் தொலைவில் 100 அடிக்கு குழி தோண்டி சுரங்கம் அமைத்து 80 அடியில் உள்ள குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.
தற்பொழுது ரிக் வாகனம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ரிக் வாகனம் தற்பொழுது மணப்பாறையை வந்தடைந்து உள்ளது. இன்னும் குழந்தை சிக்கியுள்ள கிராமத்திற்கு இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிடும். ஏனென்றால் சுமார் 90 கிலோ எடை கொண்ட ரிக் வாகனத்தால் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல முடியும். மேலும் அது வந்தடைந்த பின் சுமார் 2 மணி நேரம் அதனுடைய கருவிகள் பொருத்துவதற்கு தாமதம் ஆகும். ஆகையால் அதிகாலை 4 மணி அளவில் குழந்தையை மீட்பதற்கான பணிகள் வாகனத்தின் மூலம் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.