விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றுவதில் வந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை, நடந்ததை சொல்லியுள்ளோம் என திருமாவளவன் கூறினார்.
தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அப்படி செய்வது இல்லை. சில அதிகாரிகள் இந்தக் கொடியை ஏற்றினால் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தடை விதிக்கிறார்கள். அதுவே பிறகு பிரச்சனையாக மாறிவிடுகிறது. வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு அதிகாரம் இருக்கின்றது. அவர்கள் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கூடிய அதிகாரத்தை தருகிறார்கள்.
எனவே தன்னிச்சையாக அவர்களுடைய விருப்பு வெறுப்பு அடிப்படையில் சில நேரங்களில் முடிவு எடுக்கிறார்கள். விருப்பு-வெறுப்பு அடிப்படையில் எடுக்கின்ற முடிவுகள்தான் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. சில கட்சிகளோடு நெருக்கமாக இருக்கிறார்கள், சில காட்சிகளை தள்ளி வைக்கிறார்கள். சில சமூகத்தினரோடு நெருக்கமாக இருக்கிறார்கள், சில சமூகத்தினரை வெறுக்கிறார்கள்.
குறிப்பாக தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் புகார் கொடுத்தால் அதை காவல்துறை அதிகாரிகள் எடுத்துக்கொள்வதில்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் வழக்குப்பதிவு செய்வதில்லை. இதுபோன்ற பல நெருக்கடிகள், சவால்கள் காவல்துறையின் மூலமாக ஏற்படுகிறது. அது தொடர்ந்து இருக்கின்ற பிரச்சனை… ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற பிரச்சனையாகும். அவ்வப்போது இதை நாங்கள் எதிர்கொண்டு போராடி போராடி தான் கொடிகளை ஏற்றவேண்டி இருக்கின்றது அல்லது இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கின்றது.
இதேபோல் காவல்துறையினர் நடந்து கொள்கிறார்கள் என்பதை பயன்படுத்திக்கொண்டு சாதியவாத சக்திகள், மதவாத சக்திகள் பிரச்சினைகளை திசை திருப்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வன்முறைகளுக்கு இடம் கொடுக்கிறார்கள், தூண்டுகிறார்கள். ஆகவே இது தொடர்பாக நாங்கள் முதல்வரிடத்தில் விளக்கி பேசி இருக்கின்றோம். இந்த சந்திப்புக்குப் பிறகு உடனடியாக கையால் பிடித்தது போல் அது நின்றுவிடும், அது சரியாகிவிடும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. இருக்கத்தான் செய்யும் இருந்தாலும்… முதல்வரின் கவனத்திற்கு நாங்கள் கொன்டு சென்று இருக்கின்றோம்.
அவருடைய கட்டுப்பாட்டில் தான் காவல்துறையும் இருக்கிறது என்பதால் ஒரு கூட்டணி கட்சி என்கின்ற முறையில் தோழமையோடு, உரிமையோடு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்களோடு பேச விரும்பினார் அந்த அடிப்படையில் நாங்களும் எங்களுடைய கோரிக்கைகளை சொல்லி இருக்கின்றோம். நாங்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை சொல்லி இருக்கின்றோம். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நடைபெற்ற விவரங்களை மட்டும் நாங்கள் சொல்லி இருக்கின்றோம் என திருமாவளவன் தெரிவித்தார்.