ஆற்றில் குதித்த மாணவியை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த வாலிபரும் சடலமாக மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்ச்புச்சாவடி வைக்கோல்கார தெருவில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆயிஷாபேகம் என்ற மகள் இருந்தார். இதில் ஆயிஷாபேகம் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிஷாபேகம் பள்ளிக்குச் செல்லாமல் கல்லணைக் கால்வாய் புதுஆற்றில் திடீரென குதித்து விட்டார். இதனையடுத்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஆயிஷா பேகத்தை காப்பாற்றுவதற்காக அதே பகுதியில் பிளாக்ஸ் நிறுவனத்தில் பதாகை வடிவமைப்பு செய்து வந்த பூதலூரை சேர்ந்த முகிலன் என்பவர் ஆற்றில் குதித்தார். அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் முகிலனும் இழுத்து செல்லபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி மற்றும் வாலிபரை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நத்தமாடிபட்டி கிராமத்தில் ஆயிஷா பேகம் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆயிஷா பேகம் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின் ஆயிஷா பேகத்தின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் முகிலன் பற்றி எந்தவித தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில் கண்டிதம்பட்டு கீழ்குமுளி பகுதியில் அவருடைய சடலம் மீட்கப்பட்டது. இதனைதொடர்ந்து முகிலன் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.