ஆழ்துளை கிணற்றில் சிக்குள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க இன்னும் சில நிமிடங்களில் பணியை தொடங்குகின்றது ரிக் இயந்திரம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தான் வடிவமைத்த பிரத்தியேக கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் கோவை, நாமக்கல் குழுவினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டும் பணி தீவிரமானது
இதற்கிடையில், “அம்மா இருக்கேன் சாமி. பயப்படாத. உன்ன எப்படியாவது மீட்டுருவேன்” என்று குழந்தையின் தாயார் பேசிய போது, அவனிடமிருந்து “ம்.. ம்.. ” என்ற பதில் மட்டும் வந்தது. பின்னர் சமூக வலைதளங்களில் சுஜித் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையும் அவனை மீட்க முற்படும் பிரார்த்தனைகளும் அதிகமாயின.
மணிகண்டனின் முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், ஐஐடி குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தாங்கள் வடிவமைத்த நவீன கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஜேசிபி இயந்திரத்தை வைத்து தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளால் குழந்தை சுஜித், 68 அடிக்கும் கீழே சென்றான்.
ஐஐடி குழுவினரின் முயற்சியும் தோல்வியை தழுவிய நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தை அடையும் முன் குழந்தை சுஜித் 100 அடிக்கும் கீழே சென்றான். அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில் இறுதியாக போர்வெல் குழி அருகே ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் நமக்கு புதிதானது அல்ல. இதற்கு முன் ஆழ்துளை கிணறுகளில் விழுந்த எத்தனையோ குழந்தைகள் உயிரோடோ அல்லது இறந்தநிலையிலோ மீட்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய வேதனையும் பிரார்த்தனையும் தற்காலிகமாகவே இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வுகளை காண முன்வருவதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வருமா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 33 மணி நேரத்துக்கும் மேலான நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் இயந்திரத்தை சம்பவ இடத்தில் நிலை நிறுத்துவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருகிறது.தற்காலிகமாக ஆழ்துளைக் கிணற்றின் அருகே மேடு அமைக்கப்பட்டு, ரிக் இயந்திரத்தின் பணி தொடங்கியது. இன்னும் சில மணி நேரத்தில் சுஜித் மீட்கப்படுவான் என்ற தன்னம்பிக்கை எழுந்துள்ளது.