ஆப்கானில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த டேயிஷ் போராளிகளை தலீபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். மேலும் தலீபான்கள் ஆட்சி அமைத்த பின்னர் ஆப்கானில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆப்கானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஈத் கா என்ற மசூதியில் நேற்று திடீரென பயங்கரமான குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின் போது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஆப்கானின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை டேயீஷ் என்னும் பயங்கரவாத அமைப்பின் பதுங்கு குழிகளின் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் டேயீஷ் போராளிகளை தலீபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இது குறித்து விரிவான விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.