அமீரகத்தின் துணை அதிபர் எக்ஸ்போ 2020 கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நாட்டின் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார்.
துபாயில் மிக பிரமாண்டமாக தொடங்கிய ‘எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில்’ 192 நாடுகள் பங்கேற்றன. மேலும் கண்காட்சியின் 3 ஆவது நாளை, அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் பார்வையிட்டார். அப்போது பல நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அமீரக துணை அதிபருடன் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துணை ஆட்சியாளர், அமீரக துணை பிரதமர் மற்றும் நிதி மந்திரியும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இவர்களை துபாய் எக்ஸ்போ 2020 இன் தலைவரான ரீம் அல் ஹாஷெமி உட்பட கண்காட்சியின் நிர்வாகிகள் பலரும் வரவேற்றனர். இதற்கு முன் கண்காட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற துணை அதிபர் ருவாண்டா நாட்டின் அதிபர் பவுல் ககேமை அங்கு நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் பின் துணை ஆட்சியாளர் மற்றும் பட்டத்து இளவரசர் கண்காட்சியின் வளாகத்தில் பல்வேறு நாட்டு அரங்குகளை பார்வையிட்டார். அப்போது பக்ரைன் நாட்டு அரங்கில் வைக்க பட்டிருந்த பாரம்பரியமான பழங்கால பொருட்களை பார்வையிட்டார். இதனை அடுத்து கத்தார் அரங்குக்கு சென்ற போது அந்நாட்டு அதிகாரிகளுடன் அடுத்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் ஏற்பாடுகள் பற்றி பேசினார்.
அடுத்ததாக உகாண்டா அரங்கில் அதிபர் யோவேரி முசவேனியை சந்தித்து நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபருக்கு அமீரக துணை அதிபர் நேரில் வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து குவைத் மற்றும் ரஷியா அரங்குகளில் அந்நாட்டின் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைகளை பார்வையிட்டார். மேலும் கண்காட்சியின் பல்வேறு அரங்குகள் மற்றும் வளாகங்களையும் பார்வையிட்டார்.