உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின் ஜெர்மனியில் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த பின் ஜெர்மனியில் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அந்நாட்டின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதனையடுத்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டார். அதன்பின் ஜெர்மனியில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியாக கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று வால்டர் ஜே லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து சமீபத்தில் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அக்டோபர் மாத இறுதிக்குள் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவலை வால்டர் ஜே லிண்ட்னர் கூறியுள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் கோவேக்சின் செலுத்தியுள்ள பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும். ஏனென்றால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை கோவேக்சின் அல்லது வேறு எந்த அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஜெர்மனியில் நுழைய கோவிட்-19 எதிர்மறை சோதனை அறிக்கையை கொடுக்க வேண்டும் என்றார்.
இதுவரை ஜெர்மனியில் கோவிஷீல்டு உட்பட பயோஎன்டெக்/ ஃபைசர், ஜான்சன், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய 5 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் மருந்து நிறுவனத்தால் கோவிட்-19-க்கு எதிரான மருந்தாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியே கோவேக்சின் ஆகும். இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படும். மேலும் இந்தியாவில் மட்டுமின்றி 9-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.