உத்தரபிரதேச வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்
உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் கேரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருப்பதை அறிந்த விவசாய சங்கத்தினர் நேற்று லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்..
அப்போது முதல்வரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் சென்றபோது, அவரையும் விவசாயிகள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டியுள்ளனர்.
ஆனால் மத்திய அமைச்சர் மகன் கூட்டத்தில் புகுந்து இடித்து தள்ளி காரை எடுத்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கார் மோதியதில் தான் 4 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகனின் கார் உட்பட 3 காரை அடித்து உடைத்து நொறுக்கி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.. லக்கிம்பூர் பகுதியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் நிறைய பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பலியான விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க லக்கிம்பூர் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தரப்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் அளித்த பேட்டியில், லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக பிரதமரும், உ.பி முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி உடனே விடுவிக்க வேண்டும். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தரப்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.