நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் 12 மாநில முதலமைச்சர்களை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்துடன் நீட் தேர்வு தொடர்பான ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் இணைத்து அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2001 என்ற சட்ட முன்வடிவு நகலையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பி உள்ளார். நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியல் அமைப்பு அதிகார சமநிலை மீறப்படுவதாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசுகள் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில் தங்கள் அரசியல் அமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலை நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற விளிம்புநிலை மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் சிரமங்களுக்கு உள்ளாவதை தடுக்கவும், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரதும் ஒத்துழைப்பை எதிர் நோக்குவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகளை விளக்க நீதிபதி ஏ கே ராஜன் குழு அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு திமுக எம்பிக்கள் குழு நேரில் வழங்கி ஆதரவு கோர வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.