பால்வளத்துறையில் வேலைக்கும், பணியிட மாறுதலுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகையான ஆவின் விற்பனை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார். அதனால் பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக 1 கோடி நுகர்வோர் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் புதிதாக 6 லட்சம் நபர்கள் ஆவினில் சேர்ந்ததால் இதனுடைய சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. எனவே முதல்வர் மு.க ஸ்டாலின் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் பயன்பாட்டில் இல்லாத உற்பத்தி சங்கங்களை புதுப்பிப்பதற்காகவும் விவசாயத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
எனவே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியம் மற்றும் பால்வளத்துறையின் முடிவுகளை விரைவாக செயல்படுத்துவதற்காக பணியிடை மாற்றங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆவின் பால் வளத்துறையில் பணியிடை மாற்றம் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணத்தைக் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.