கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தன் கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூரில் மாற்றுத்திறனாளி ஷபானா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன் கணவருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஷபானா கூறியதாவது “மாற்றுத்திறனாளியான நான் அரசு வேலைவாய்ப்பு வேண்டி கடந்த 5 வருடங்களாக மனு கொடுத்துள்ளேன். இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது கோரிக்கை தொடர்பாக நான் வீட்டில் இல்லாதபோது அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்துள்ளனர்.
அந்த வீட்டை அதிகாரிகள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துச் சென்றனர். அதன்பின் வாடகைக்கு குடியிருந்த அந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து நான் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதையும் அவர்கள் தடுத்து வருகின்றனர். எனவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று அவர் கூறினார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த ஷபானா அதிகாரிகளிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார்.