கொரோனா நிவாரணம் வேண்டி கைக்குழந்தைகளுடன் பெண் வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரியான முருகேசன் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதன்படி சிவகிரி கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி துளசிமணி தனது கைக்குழந்தைகளுடன் வருவாய் அதிகாரி முருகேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் துளசிமணி கூறியதாவது “எனது கணவர் டிரைவராக பணி செய்து வந்தார். எங்களுக்கு திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த வருடம் நான் 7 மாத கர்ப்பமாக இருந்தேன். அப்போது என் கணவர் சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனையடுத்து எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது. எனவே கணவரை இழந்த நான் வாழ்வாதாரமின்றி 2 குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். இதனால் எனக்கு நிவாரண நிதியும், குழந்தைகளை பராமரிக்க அரசு வேலையும் கொடுக்க வேண்டும்” என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.