கணவன் மற்றும் மாமியார் தாக்கி இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிலந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை அடுத்துள்ள ஏ. மேட்டுப்பட்டி பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நாகை நல்லூரில் வசித்து வரும் முருகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு 1 வதியில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முருகவேல் தனது தாயுடன் சேர்ந்து நந்தினியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நந்தினிக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நந்தினியின் உறவினர்கள் திரண்டு வந்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம் கேட்ட போது நந்தியின் கணவர் முருகவேல் மற்றும் அவரது தாயார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.