கனரக வாகனங்களுக்கான ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கனடா அரசு திணறி வருகிறது.
பிரித்தானியாவில் பிரெக்சிட் விவகாரம், ஓட்டுனர்கள் முதிர்ச்சியடைந்து பணியிலிருந்து ஓய்வு பெறுதல், கடினமான பணிச்சுமை ஆகியவை கனரக ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணங்களாகும். இதே நிலைமையானது தற்பொழுது கனடாவிலும் ஏற்பட்டுள்ளது. இதில் பிரெக்சிட் விவகாரம் தவிர்த்து மற்ற அனைத்து பிரச்சனைகளும் அடங்கும். அதிலும் நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் சுமார் 18,000 ஓட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கனடா கணித்துள்ளது.
மேலும் வரும் 2025 ஆம் ஆண்டு வரை ஆண்டு ஒன்றிற்கு 17,230 ஓட்டுனர்கள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து கனடாவில் கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஒன்று தான். அதாவது, வாகன ஓட்டுனர்களில் 37% பேர் குறைந்தபட்சம் 55 வயதை எட்டியவர்கள். இவர்களும் விரைவில் ஓய்வுபெறும் நிலையில் உள்ளதால் காலிபணியிடங்கள் அதிகமாகிவிடும். அதிலும் இளைஞர்கள் கனரக வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.
ஏனெனில் அது அவர்களுக்கு அதிக பணிச்சுமையாக உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி மற்றும் ஓட்டுனர் உரிமத்திற்காக 60,000 முதல் 70,000 டாலர்கள் செலவாகும் என்பதால் இப்பணியை தேர்ந்தெடுப்பதற்கு இளைஞர்கள் தயங்குகின்றனர். குறிப்பாக பிரித்தானியாவில் உருவாகியுள்ள அதே நிலைமை கனடாவிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.