தொழிலாளியை வெட்டியவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சொரிக்குளம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகு என்ற மனைவி உள்ளார். இவர் கீழச்சொரிக்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகுவை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ஈஸ்வரனின் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கு மீனாட்சிசுந்தரத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈஸ்வரன் தனது வீட்டின் அருகில் இருந்தபோது அங்கு வந்த மீனாட்சிசுந்தரம் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஈஸ்வரனின் மனைவி சித்ரா பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தப்பியோடிய மீனாட்சி சுந்தரம் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அந்த தகவலின் பேரில் பழையனூர் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.