முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.
அதனை மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மேலும் இந்த இடத்திற்கான வாடகை நிலுவைத் தொகை ரூபாய் 1 கோடி பள்ளி நிர்வாகம் தர வேண்டியுள்ளது. அதில் முதல் தவணையாக ரூபாய் 18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மிஞ்சியுள்ள தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் ஏழை எளிய மாணவர்கள் விளையாடுவதற்காக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் எல்லைக்கள் ஊன்றி அறநிலையத்துறை என எழுதப்படும். ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலமாக கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்து அதன் வட்டி மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்