சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து தொடர்பான வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை என்.சி.பி காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் மேலும் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு வந்த தகவலின் பேரில் கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருளுடன் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட மூன்று பேரை மட்டும் 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க கோரி மும்பை நீதிமன்றத்தில் எம்.சி.பி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 7ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் வருகிற 11-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த போதைப்பொருள் விருந்து வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.