ஐ.நா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் ஹைதி நாட்டிற்கு தங்களது ஆதரவை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினரான டி. எஸ். திருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது “வட அமெரிக்காவிலுள்ள கரீபியன் தீவுகளில் ஹைதி நாடு உள்ளது. தற்பொழுது ஹைதி நாடானது தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் அங்கு கடத்தல், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல், கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பயங்கரமான கலவரங்கள் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக 944 கொலைகள், 124 கடத்தல்கள், 78 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் போன்ற கொடுமையான குற்றங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. இது போன்ற நெருக்கடியான சூழலில் இந்தியா ஹைதி நாட்டிற்கு தனது ஆதரவினை அளித்துள்ளது. அதிலும் ஹைதி மக்கள் அனைவரும் கூட்டாக இணைந்து சமூகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் ஹைதி நாட்டின் முன்னாள் அதிபரான ஜோவெனெல் மோய்ஸ் படுகொலை சம்பந்தப்பட்ட விசாரணையானது வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகள் அனைத்தும் ஹைதிக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஹைதியில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதிலும் 77,000 வீடுகள் நிலநடுக்கத்தினால் சேதமடைந்தன. அது போன்றதொரு கடினமான சூழலில் இந்தியா ஹைதி நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.