மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பாஜக-வுக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் 56 இடங்களை வைத்துக்கொண்டு பாஜகவிடம் ஆட்சியில் சமபங்கு கோரிவருகிறது.
இதனிடையே யார் முதலமைச்சர் ஆவது என்பது தொடர்பாக இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நான்கு நாட்களாக தொடர்வதால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. 50-50 பங்கீடு என்ற அடிப்படையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக பாஜகவிடம் சிவசேனா வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக தலைமையோ இதற்கு சம்மதம் தெரிவிக்காமல், ஆதித்யாவை முழுமையாக 5 ஆண்டுகளுக்கு துணை முதலமைச்சராக்கத் தயார் என தெரிவித்திருப்பதால் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸையே மீண்டும் முதலமைச்சராக்க தீவிரம் காட்டிவரும் சூழலில் இருகட்சியினருமே ஆளுநரை தனித்தனியாக சந்தித்தனர்.
இந்நிலையில், வரும் 30ஆம் தேதி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில், பாஜக சட்டமன்றக் குழுக் கூட்டம் மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. அதே நாளில் சிவசேனாவுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் 30ஆம் தேதி வரை புதிய அரசு அமையாது என்ற சூழலே நிலவுகிறது.