தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை 6 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப் பதிவு மையத்தில் தயாராக இருக்க வேண்டும். வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் 17 ஆயிரத்து 130 போலீசாரும், 405 ஊர்காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு ஒன்பதாம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற உடன் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.