கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிய வரவேற்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் ராஜேந்திரபாலாஜி உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தர். இதன் அடிப்படையில் நேற்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் கொலை மிரட்டல் மட்டுமல்லாமல் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் அமைச்சருக்கான முன்ஜாமீன் மனுவை வலியுறுத்துவது இல்லை என்று தெரிவித்து அதனை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து அமைச்சரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.