பிரித்தானியா தூதரகத்தின் முன்னாள் ஓட்டுனரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள பிரித்தானியா தூதரகத்தில் 11 ஆண்டுகளாக அங்குள்ள அதிகாரிகளுக்கு ஓட்டுனராக 44 வயதுடைய ஒருவர் பணிபுரிந்துள்ளார். மேலும் கடந்த மே மாதம் தான் 150 ஓட்டுனர்கள் வெளியேறுவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளனர். அதில் இவரும் ஒருவர். அதுவும் காபூலிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆயுதமேந்திய ஐந்து மர்ம நபர்கள் அவரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்கியுள்ளனர்.
நீங்கள் இன்னும் சர்வதேச அமைப்பிற்காக பணியாற்றி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர். அதற்கு இவர் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் கூறியதாவது “நீங்கள் இன்னும் அந்த மக்களுக்காகவே சேவை செய்கிறீர்கள் என்று தெரிந்தால் மீண்டும் நாங்கள் திரும்பி வந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொன்று விடுவோம்” என்று மிரட்டியுள்ளனர்.
இதனை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு மொழிபெயர்ப்பாளர் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது பெயரை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அவரது குழந்தைகள், மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்டதாகவும் இப்பொழுது வீட்டை விட்டு வெளியேறவே அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.